Saturday, June 28, 2008

கலவை புத்தக வெளியீடு

நூல் வெளியீடு : "கலவை" சிறுகதை தொகுப்பு வெளியீடு - பாண்டித்துரை [pandiidurai@yahoo.com]

நன்றி : தமிழோவியம் & பாண்டித்துரை


15.06.2008 ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழிமையத்தில் சபா.இராஜேந்திரன் அவர்களின் "கலவை" முதல் சிறுகதைதொகுப்பு (தங்கமீன் பதிப்பக வெளியீடு) வெளியடப்பட்டது.

இந்த வெளியீட்டுவிழா கொஞ்சம் வித்தியாசமாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பலருக்கும் பத்து தினங்களுக்கு முன்னரே "கலவை" சிறுகதை புத்தகத்தை அவர்களின் வீட்டுமுகவரிக்கு அனுப்பிவைத்துவிட்டார் நூலாசிரியர். காரணம் புத்தவெளியீட்டன்று தொடர்ந்து மாலை நடைபெற்ற வாசக கலந்துரையாடலே !
சிங்கப்பூர்ல் புத்தக வெளியீடு என்றால் இரண்டு மணிநேரத்திற்குள் முடிந்துவிடும். ஆனால் "கலவை" சிறுகதைதொகுப்போ வாசகனும் எழுத்தாளனும் சேர்ந்த கலவையை மையப்படுத்தி காலை 10.30 மணியிலிருந்து 12.30 வரை ஐந்து எழுத்தாளர்களின் பார்வையில் கலவை என்ற ஆய்வும் அதன்பின் 1.30 மணிமுதல் மாலை 4.30மணிவரை பத்து சிறுகதைகள் அடங்கிய "கலவை" சிறுகதை மீதான வாசகர்பார்வை அதற்கு நூலாசிரியரின் பதில் பின்னர் ஒட்டுமொத்த வாசகப்பார்வையின் தொகுப்புரை என்று பிரமிக்கசெய்யும்மளவு வித்தியாசமாக நடைபெற்றது இனிவரும் ஆரோக்கியமான புத்தகவெளியீட்டிற்கு முன்மாதிரியாக இருக்ககூடும்.

தங்கமீன் பதிப்பத்தின் ஏற்பாட்டால் நடைபெற்ற இவ்விழாவில் நிகழ்ச்சியை தங்கமீன் பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் பாலுமணிமாறன் நெறிப்படுத்திச்சென்றார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளார் சங்க கழக செயலாளர் சுபஅருணாச்சலம் வரவேற்றுப் பேசினார்.

என்பார்வையில் கலவை என்று எழுத்தளார் புதுமைத்தேனி மா.அன்பழகன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் எழுத்தாளர் நா. ஆண்டியப்பன் எழுத்தாளார் குமாரி சூர்யரெத்னா கவிஞர் நீதிப்பாண்டி என்ற பாண்டித்துரை (நான்) ஒலி 96.8ன் மூத்த செய்திநிர்வாகி செ.ப.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்.

மதிய உணவிற்குபின் எழுத்தாளர்கள் திரு.இரா.கண்ணபிரான் திருமதி.கமலாதேவி அரவிந்தன் இருவரின் கலைவைபற்றிய பார்வையிலான கட்டுரைகளின் வாசிப்பினையடுத்து திரு.அருண் மகிழ்நன் கலந்துரையாடலை வழிநடத்திச்செல்ல கதைக்கருவை பற்றி கலந்துரையாடியபொழுது ஒரு " மாணவன் - ஒரு நாள் - ஒரு ஆசிரியை " என்ற சிறுகதை பலரின் விமர்சனங்களுக்கு உட்பட்டது. " தடுமாற்றம் " " இன்னசெய்தாரை " போன்ற சிறுகதைகளும் தொடர்ந்து அதிகம் விவாதிக்கப்பட்டது. மொழிபற்றிய பார்வையில் ஆங்கில கலப்புபற்றியும் ஆசிரியர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அதானாலான எதிர்பார்ப்புகள் என்று தொடந்த கலந்துரையாடலின் முடிவில் விமர்சகர் ந.சுப்பிரமணியம் தொகுப்புரையாற்றினார். இறுதியாக நூலாசிரியர் சபா.ராஜேந்திரன் அவர்கள் ஏற்புரையாற்றினார்.

புதிதாக எழுத வந்திருப்பவர்களுக்கு இந்நிகழ்வு ஒரு பயிற்சிபட்டறையே. இதுபோன்ற நிகழ்வுகள்தான் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை ஆரோக்கியமாகவும், அடுத்தகட்ட நகர்வினை நோக்கி இட்டுச்செல்லும் காரணியாகவும் இருக்ககூடும்.







Friday, June 27, 2008

வேறொரு மனவெளி புத்தக வெளியீடு

சிங்கப்பூர் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பான 'வேறொரு மனவெளி' கடந்த 30 ஏப்ரல் 2008 அன்று இரவு 7.00 மணிக்கு சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்தது. 20 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய இந்த நூலை பாலு மணிமாறன் தொகுத்திருக்கிறார். இராம கண்ணபிரான், டாக்டர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி, சை.பீர்முகமது கதைத் தேர்வில் உதவியிருக்கிறார்கள்.

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் இந்த நூலுக்கான முதல் வித்து விதைக்கப்பட்டது என்று துவங்கி, படிப்படியாக இந்த நூல் முழு உருவம் பெற ஒரு வருடம் ஆன கதையை ஒர் சிறுகதை மாதிரி பகிர்ந்து கொண்டார் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரான். டாக்டர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மியின் உரையில் சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் கடக்க வேண்டிய தொலைவு பற்றிய கவலை கனிவோடு வெளிப்பட்டது. பொதுவாக இதுபோன்ற மேடைகளில் தயவு தாட்சன்யமின்றி விமர்சனவிரல்களால் கீறிப் பார்த்துவிடும் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மியைப் பார்த்து பழக்கப்பட்டவர்கள் அன்று பார்த்ததோ வேறு முகம்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரன் சிங்கப்பூர்-மலேசிய இலக்கியப் பகிர்வு மற்றும் பறிமாற்றத்தின் அவசியம் பற்றிப் பேசியதோடு, மலேசியப் பெண் எழுத்தாளர்களின் கதைகள் 'சம்பல்' சமைப்பது போன்ற சங்கதிகளை விட்டு வெளிவந்து, பரந்து விரிந்த இந்த பூமியின் மற்ற வெளிகளைத் தேட வேண்டுமென்ற வேண்டுகோள் விடுத்தார். சிங்கப்பூர்-மலேசியப் பெண் எழுத்தாளர்களைக் கொண்டு ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டுமென்ற ஆசையும் அந்தப் பேச்சில் வெளிப்பட்டது.
சிங்கப்பூரையும், மலேசியாவையும் பிரிப்பது ஒரு சின்னப் பாலம்தான் என்பதும், 1965க்கு முன்புவரை இந்த இரண்டு நாடுகளும் மலேயா என்ற பெயரில் ஒன்றாகத்தான் இருந்தன என்ற சரித்திர உண்மையும், சமீபகால இலக்கிய பகிர்வுகளுக்கு எந்த வகையிலும் காரணமாகவில்லை என்பது பெரிய சோகமென்றால், அமைப்பு ரீதியான பரிவர்த்தனைகள் கூட தனிமனித விருப்பு வெறுப்புகளால் அருகி விட்டன என்ற விஷயம் இன்னொரு சோகம். இராஜேந்திரனின் சிங்கப்பூர் வருகை அந்த வகையில் ஒரு புதிய துவக்கமாக அமையலாம்.

அமைப்புரீதியான முயற்சிகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், கடந்த சில ஆண்டுகளாக மலேசியத்தமிழ் இலக்கியத்தைப் பற்றிய செய்திகளை தனது இடுப்பில் இழுத்துக் கட்டிக்கொண்டு விமானம் ஏறுவது சை.பீர்முகம்மதின் வழக்கமாக இருக்கிறது. வேறொரு மனவெளி புத்தக வெளியீட்டிலும் மலேசியப் பெண் எழுத்தாளர்கள் சமகால இலக்கியங்களோடு அந்நியப்பட்டு நிற்கிறார்கள் என்ற விமர்சனத்தை முன்வைத்தார். இந்த மாதிரி தொகுப்பு முயற்சிகளைப் பார்க்கிறவன் நம்மை 'முட்டாள்' என்று அழைத்தால்கூட கவலைப் படாமல் நமது பணியை செய்து கொண்டே போக வேண்டுமென்ற அறிவுரையையும் வாழ்க்கையிலிருந்து எடுத்து வைத்தார்.

சிங்கப்பூரின் மிக முக்கியமான ஊடக ஆளுமையாளர்களில் ஒருவர் முகமது அலி. வேறொரு மனவெளி பற்றிய நூலாய்வைச் செய்தார். தொலைக்காட்சி அவரை முழுமையாக விழுங்கி விடவில்லை என்பதை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்பதன் மூலம் நிருபித்து வருகிறார். 20 கதைகளில் 3 கதைகள் மட்டும் தன்னை அதிகம் தைத்ததாகச் சொன்ன அவரது தைரியத்தை மற்ற 17 பெண் எழுத்தாளர்களால் ஜீரணிக்க முடிந்ததா என்று தெரியவில்லை. அவர் சொன்ன அந்த மூன்று கதைகளில் ஒன்றான 'பொழப்பு' ஏற்கனவே காலச்சுவட்டில் வெளியானதன் மூலம் பரந்த கவனத்தைத் பெற்றது. ஒருகாலத்தில் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து தற்போது சிங்கப்பூர் நிரந்தரவாசியாகிவிட்ட செளம்யாவின் 'நான் என்னைக் காதலிக்கிறேன்' என்ற கதையும் விரிவாக விமர்சிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற நூல் வெளியீட்டில் 17 பெண் எழுத்தாளர்கள் நூல்களையும், பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டார்கள். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தோடு இணைந்து, சிங்கப்பூர்-மலேசியத் தமிழ் இலக்கிய ஆய்வுக்கு உதவும் வகையில் தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கையை அமைத்ததற்காக, முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவுனர் மு.முஸ்தபா அவர்களுக்கு முதல் நூல் சமர்ப்பிக்கப்பட்டது. 'அன்பின் ஊற்று' அப்துல் ஜலீல் தலைமையில், திரைப்பட இயக்குனர் அமீர் முதல் நூலை முஸ்தபாவிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமீரின் உரை அமைந்தது.
'நான் பொதுவாக புத்தகம் வாசிப்பவனில்லை, அதிகமாக மனிதர்களைத்தான் வாசிக்கிறேன்' என்ற நேர்மையான வாக்குமூலத்தோடு துவங்கிய அமீரின் ஒப்பனையற்ற பேச்சு சிங்கப்பூர் போன்ற நகரவாழ்க்கையின் ஒப்பனைமிகுந்த சிக்கல்களை சதா நுகர்ந்து கொண்டிருக்கும் மனங்களைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்ததில் ஆச்சரியமில்லை. 'எதை எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை, தொடர்ந்து எழுதுவதுதான் முக்கியம்' என்ற சொன்ன அமீர், சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டில் 20 தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதே ஒரு தமிழனாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பெண் எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதுவது மட்டுமே கூட இந்தத் தொகுப்பின் வெற்றியாக அமையக்கூடும் என்பது தொகுப்பாசிரியரின் கருத்து. ஒரு வேலை நாளில், 250 பேருக்குமேல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது பெரிய விஷயம். இன்னும் பல நூல்களுக்கு இந்தக்கூட்டம் ஒரு உந்து சக்தியாக இருக்கக்கூடும்.