Friday, June 27, 2008

வேறொரு மனவெளி புத்தக வெளியீடு

சிங்கப்பூர் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பான 'வேறொரு மனவெளி' கடந்த 30 ஏப்ரல் 2008 அன்று இரவு 7.00 மணிக்கு சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்தது. 20 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய இந்த நூலை பாலு மணிமாறன் தொகுத்திருக்கிறார். இராம கண்ணபிரான், டாக்டர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி, சை.பீர்முகமது கதைத் தேர்வில் உதவியிருக்கிறார்கள்.

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் இந்த நூலுக்கான முதல் வித்து விதைக்கப்பட்டது என்று துவங்கி, படிப்படியாக இந்த நூல் முழு உருவம் பெற ஒரு வருடம் ஆன கதையை ஒர் சிறுகதை மாதிரி பகிர்ந்து கொண்டார் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரான். டாக்டர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மியின் உரையில் சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் கடக்க வேண்டிய தொலைவு பற்றிய கவலை கனிவோடு வெளிப்பட்டது. பொதுவாக இதுபோன்ற மேடைகளில் தயவு தாட்சன்யமின்றி விமர்சனவிரல்களால் கீறிப் பார்த்துவிடும் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மியைப் பார்த்து பழக்கப்பட்டவர்கள் அன்று பார்த்ததோ வேறு முகம்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரன் சிங்கப்பூர்-மலேசிய இலக்கியப் பகிர்வு மற்றும் பறிமாற்றத்தின் அவசியம் பற்றிப் பேசியதோடு, மலேசியப் பெண் எழுத்தாளர்களின் கதைகள் 'சம்பல்' சமைப்பது போன்ற சங்கதிகளை விட்டு வெளிவந்து, பரந்து விரிந்த இந்த பூமியின் மற்ற வெளிகளைத் தேட வேண்டுமென்ற வேண்டுகோள் விடுத்தார். சிங்கப்பூர்-மலேசியப் பெண் எழுத்தாளர்களைக் கொண்டு ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டுமென்ற ஆசையும் அந்தப் பேச்சில் வெளிப்பட்டது.
சிங்கப்பூரையும், மலேசியாவையும் பிரிப்பது ஒரு சின்னப் பாலம்தான் என்பதும், 1965க்கு முன்புவரை இந்த இரண்டு நாடுகளும் மலேயா என்ற பெயரில் ஒன்றாகத்தான் இருந்தன என்ற சரித்திர உண்மையும், சமீபகால இலக்கிய பகிர்வுகளுக்கு எந்த வகையிலும் காரணமாகவில்லை என்பது பெரிய சோகமென்றால், அமைப்பு ரீதியான பரிவர்த்தனைகள் கூட தனிமனித விருப்பு வெறுப்புகளால் அருகி விட்டன என்ற விஷயம் இன்னொரு சோகம். இராஜேந்திரனின் சிங்கப்பூர் வருகை அந்த வகையில் ஒரு புதிய துவக்கமாக அமையலாம்.

அமைப்புரீதியான முயற்சிகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், கடந்த சில ஆண்டுகளாக மலேசியத்தமிழ் இலக்கியத்தைப் பற்றிய செய்திகளை தனது இடுப்பில் இழுத்துக் கட்டிக்கொண்டு விமானம் ஏறுவது சை.பீர்முகம்மதின் வழக்கமாக இருக்கிறது. வேறொரு மனவெளி புத்தக வெளியீட்டிலும் மலேசியப் பெண் எழுத்தாளர்கள் சமகால இலக்கியங்களோடு அந்நியப்பட்டு நிற்கிறார்கள் என்ற விமர்சனத்தை முன்வைத்தார். இந்த மாதிரி தொகுப்பு முயற்சிகளைப் பார்க்கிறவன் நம்மை 'முட்டாள்' என்று அழைத்தால்கூட கவலைப் படாமல் நமது பணியை செய்து கொண்டே போக வேண்டுமென்ற அறிவுரையையும் வாழ்க்கையிலிருந்து எடுத்து வைத்தார்.

சிங்கப்பூரின் மிக முக்கியமான ஊடக ஆளுமையாளர்களில் ஒருவர் முகமது அலி. வேறொரு மனவெளி பற்றிய நூலாய்வைச் செய்தார். தொலைக்காட்சி அவரை முழுமையாக விழுங்கி விடவில்லை என்பதை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்பதன் மூலம் நிருபித்து வருகிறார். 20 கதைகளில் 3 கதைகள் மட்டும் தன்னை அதிகம் தைத்ததாகச் சொன்ன அவரது தைரியத்தை மற்ற 17 பெண் எழுத்தாளர்களால் ஜீரணிக்க முடிந்ததா என்று தெரியவில்லை. அவர் சொன்ன அந்த மூன்று கதைகளில் ஒன்றான 'பொழப்பு' ஏற்கனவே காலச்சுவட்டில் வெளியானதன் மூலம் பரந்த கவனத்தைத் பெற்றது. ஒருகாலத்தில் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து தற்போது சிங்கப்பூர் நிரந்தரவாசியாகிவிட்ட செளம்யாவின் 'நான் என்னைக் காதலிக்கிறேன்' என்ற கதையும் விரிவாக விமர்சிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற நூல் வெளியீட்டில் 17 பெண் எழுத்தாளர்கள் நூல்களையும், பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டார்கள். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தோடு இணைந்து, சிங்கப்பூர்-மலேசியத் தமிழ் இலக்கிய ஆய்வுக்கு உதவும் வகையில் தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கையை அமைத்ததற்காக, முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவுனர் மு.முஸ்தபா அவர்களுக்கு முதல் நூல் சமர்ப்பிக்கப்பட்டது. 'அன்பின் ஊற்று' அப்துல் ஜலீல் தலைமையில், திரைப்பட இயக்குனர் அமீர் முதல் நூலை முஸ்தபாவிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமீரின் உரை அமைந்தது.
'நான் பொதுவாக புத்தகம் வாசிப்பவனில்லை, அதிகமாக மனிதர்களைத்தான் வாசிக்கிறேன்' என்ற நேர்மையான வாக்குமூலத்தோடு துவங்கிய அமீரின் ஒப்பனையற்ற பேச்சு சிங்கப்பூர் போன்ற நகரவாழ்க்கையின் ஒப்பனைமிகுந்த சிக்கல்களை சதா நுகர்ந்து கொண்டிருக்கும் மனங்களைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்ததில் ஆச்சரியமில்லை. 'எதை எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை, தொடர்ந்து எழுதுவதுதான் முக்கியம்' என்ற சொன்ன அமீர், சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டில் 20 தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதே ஒரு தமிழனாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பெண் எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதுவது மட்டுமே கூட இந்தத் தொகுப்பின் வெற்றியாக அமையக்கூடும் என்பது தொகுப்பாசிரியரின் கருத்து. ஒரு வேலை நாளில், 250 பேருக்குமேல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது பெரிய விஷயம். இன்னும் பல நூல்களுக்கு இந்தக்கூட்டம் ஒரு உந்து சக்தியாக இருக்கக்கூடும்.













0 comments: