Monday, March 28, 2011

சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875-1941 ; திரு.பால பாஸ்கரனின் உரை





தங்கமீன் இணைய இதழ் வெளியீட்டு விழா







Monday, August 30, 2010

சை.பீர்முகம்மதின் புத்தக வெளியீடு


(புத்தக வெளியீட்டில் பிரமுகர்கள்)


(மாணவர்களோடு எழுத்தாளர்)


('தென்றல்' ஆசிரியர் வித்யாசாகர்)


(சூடாக உரையாற்றும் சை.பீர்முகம்மது)


(பேசுவது யாரோ...பார்வைகள் அவ்விடம்)


(ஜோதி மாணிக்க வாசகம்)








Saturday, June 28, 2008

கலவை புத்தக வெளியீடு

நூல் வெளியீடு : "கலவை" சிறுகதை தொகுப்பு வெளியீடு - பாண்டித்துரை [pandiidurai@yahoo.com]

நன்றி : தமிழோவியம் & பாண்டித்துரை


15.06.2008 ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழிமையத்தில் சபா.இராஜேந்திரன் அவர்களின் "கலவை" முதல் சிறுகதைதொகுப்பு (தங்கமீன் பதிப்பக வெளியீடு) வெளியடப்பட்டது.

இந்த வெளியீட்டுவிழா கொஞ்சம் வித்தியாசமாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பலருக்கும் பத்து தினங்களுக்கு முன்னரே "கலவை" சிறுகதை புத்தகத்தை அவர்களின் வீட்டுமுகவரிக்கு அனுப்பிவைத்துவிட்டார் நூலாசிரியர். காரணம் புத்தவெளியீட்டன்று தொடர்ந்து மாலை நடைபெற்ற வாசக கலந்துரையாடலே !
சிங்கப்பூர்ல் புத்தக வெளியீடு என்றால் இரண்டு மணிநேரத்திற்குள் முடிந்துவிடும். ஆனால் "கலவை" சிறுகதைதொகுப்போ வாசகனும் எழுத்தாளனும் சேர்ந்த கலவையை மையப்படுத்தி காலை 10.30 மணியிலிருந்து 12.30 வரை ஐந்து எழுத்தாளர்களின் பார்வையில் கலவை என்ற ஆய்வும் அதன்பின் 1.30 மணிமுதல் மாலை 4.30மணிவரை பத்து சிறுகதைகள் அடங்கிய "கலவை" சிறுகதை மீதான வாசகர்பார்வை அதற்கு நூலாசிரியரின் பதில் பின்னர் ஒட்டுமொத்த வாசகப்பார்வையின் தொகுப்புரை என்று பிரமிக்கசெய்யும்மளவு வித்தியாசமாக நடைபெற்றது இனிவரும் ஆரோக்கியமான புத்தகவெளியீட்டிற்கு முன்மாதிரியாக இருக்ககூடும்.

தங்கமீன் பதிப்பத்தின் ஏற்பாட்டால் நடைபெற்ற இவ்விழாவில் நிகழ்ச்சியை தங்கமீன் பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் பாலுமணிமாறன் நெறிப்படுத்திச்சென்றார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளார் சங்க கழக செயலாளர் சுபஅருணாச்சலம் வரவேற்றுப் பேசினார்.

என்பார்வையில் கலவை என்று எழுத்தளார் புதுமைத்தேனி மா.அன்பழகன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் எழுத்தாளர் நா. ஆண்டியப்பன் எழுத்தாளார் குமாரி சூர்யரெத்னா கவிஞர் நீதிப்பாண்டி என்ற பாண்டித்துரை (நான்) ஒலி 96.8ன் மூத்த செய்திநிர்வாகி செ.ப.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்.

மதிய உணவிற்குபின் எழுத்தாளர்கள் திரு.இரா.கண்ணபிரான் திருமதி.கமலாதேவி அரவிந்தன் இருவரின் கலைவைபற்றிய பார்வையிலான கட்டுரைகளின் வாசிப்பினையடுத்து திரு.அருண் மகிழ்நன் கலந்துரையாடலை வழிநடத்திச்செல்ல கதைக்கருவை பற்றி கலந்துரையாடியபொழுது ஒரு " மாணவன் - ஒரு நாள் - ஒரு ஆசிரியை " என்ற சிறுகதை பலரின் விமர்சனங்களுக்கு உட்பட்டது. " தடுமாற்றம் " " இன்னசெய்தாரை " போன்ற சிறுகதைகளும் தொடர்ந்து அதிகம் விவாதிக்கப்பட்டது. மொழிபற்றிய பார்வையில் ஆங்கில கலப்புபற்றியும் ஆசிரியர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அதானாலான எதிர்பார்ப்புகள் என்று தொடந்த கலந்துரையாடலின் முடிவில் விமர்சகர் ந.சுப்பிரமணியம் தொகுப்புரையாற்றினார். இறுதியாக நூலாசிரியர் சபா.ராஜேந்திரன் அவர்கள் ஏற்புரையாற்றினார்.

புதிதாக எழுத வந்திருப்பவர்களுக்கு இந்நிகழ்வு ஒரு பயிற்சிபட்டறையே. இதுபோன்ற நிகழ்வுகள்தான் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை ஆரோக்கியமாகவும், அடுத்தகட்ட நகர்வினை நோக்கி இட்டுச்செல்லும் காரணியாகவும் இருக்ககூடும்.







Friday, June 27, 2008

வேறொரு மனவெளி புத்தக வெளியீடு

சிங்கப்பூர் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பான 'வேறொரு மனவெளி' கடந்த 30 ஏப்ரல் 2008 அன்று இரவு 7.00 மணிக்கு சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்தது. 20 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய இந்த நூலை பாலு மணிமாறன் தொகுத்திருக்கிறார். இராம கண்ணபிரான், டாக்டர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி, சை.பீர்முகமது கதைத் தேர்வில் உதவியிருக்கிறார்கள்.

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் இந்த நூலுக்கான முதல் வித்து விதைக்கப்பட்டது என்று துவங்கி, படிப்படியாக இந்த நூல் முழு உருவம் பெற ஒரு வருடம் ஆன கதையை ஒர் சிறுகதை மாதிரி பகிர்ந்து கொண்டார் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரான். டாக்டர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மியின் உரையில் சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் கடக்க வேண்டிய தொலைவு பற்றிய கவலை கனிவோடு வெளிப்பட்டது. பொதுவாக இதுபோன்ற மேடைகளில் தயவு தாட்சன்யமின்றி விமர்சனவிரல்களால் கீறிப் பார்த்துவிடும் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மியைப் பார்த்து பழக்கப்பட்டவர்கள் அன்று பார்த்ததோ வேறு முகம்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரன் சிங்கப்பூர்-மலேசிய இலக்கியப் பகிர்வு மற்றும் பறிமாற்றத்தின் அவசியம் பற்றிப் பேசியதோடு, மலேசியப் பெண் எழுத்தாளர்களின் கதைகள் 'சம்பல்' சமைப்பது போன்ற சங்கதிகளை விட்டு வெளிவந்து, பரந்து விரிந்த இந்த பூமியின் மற்ற வெளிகளைத் தேட வேண்டுமென்ற வேண்டுகோள் விடுத்தார். சிங்கப்பூர்-மலேசியப் பெண் எழுத்தாளர்களைக் கொண்டு ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டுமென்ற ஆசையும் அந்தப் பேச்சில் வெளிப்பட்டது.
சிங்கப்பூரையும், மலேசியாவையும் பிரிப்பது ஒரு சின்னப் பாலம்தான் என்பதும், 1965க்கு முன்புவரை இந்த இரண்டு நாடுகளும் மலேயா என்ற பெயரில் ஒன்றாகத்தான் இருந்தன என்ற சரித்திர உண்மையும், சமீபகால இலக்கிய பகிர்வுகளுக்கு எந்த வகையிலும் காரணமாகவில்லை என்பது பெரிய சோகமென்றால், அமைப்பு ரீதியான பரிவர்த்தனைகள் கூட தனிமனித விருப்பு வெறுப்புகளால் அருகி விட்டன என்ற விஷயம் இன்னொரு சோகம். இராஜேந்திரனின் சிங்கப்பூர் வருகை அந்த வகையில் ஒரு புதிய துவக்கமாக அமையலாம்.

அமைப்புரீதியான முயற்சிகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், கடந்த சில ஆண்டுகளாக மலேசியத்தமிழ் இலக்கியத்தைப் பற்றிய செய்திகளை தனது இடுப்பில் இழுத்துக் கட்டிக்கொண்டு விமானம் ஏறுவது சை.பீர்முகம்மதின் வழக்கமாக இருக்கிறது. வேறொரு மனவெளி புத்தக வெளியீட்டிலும் மலேசியப் பெண் எழுத்தாளர்கள் சமகால இலக்கியங்களோடு அந்நியப்பட்டு நிற்கிறார்கள் என்ற விமர்சனத்தை முன்வைத்தார். இந்த மாதிரி தொகுப்பு முயற்சிகளைப் பார்க்கிறவன் நம்மை 'முட்டாள்' என்று அழைத்தால்கூட கவலைப் படாமல் நமது பணியை செய்து கொண்டே போக வேண்டுமென்ற அறிவுரையையும் வாழ்க்கையிலிருந்து எடுத்து வைத்தார்.

சிங்கப்பூரின் மிக முக்கியமான ஊடக ஆளுமையாளர்களில் ஒருவர் முகமது அலி. வேறொரு மனவெளி பற்றிய நூலாய்வைச் செய்தார். தொலைக்காட்சி அவரை முழுமையாக விழுங்கி விடவில்லை என்பதை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்பதன் மூலம் நிருபித்து வருகிறார். 20 கதைகளில் 3 கதைகள் மட்டும் தன்னை அதிகம் தைத்ததாகச் சொன்ன அவரது தைரியத்தை மற்ற 17 பெண் எழுத்தாளர்களால் ஜீரணிக்க முடிந்ததா என்று தெரியவில்லை. அவர் சொன்ன அந்த மூன்று கதைகளில் ஒன்றான 'பொழப்பு' ஏற்கனவே காலச்சுவட்டில் வெளியானதன் மூலம் பரந்த கவனத்தைத் பெற்றது. ஒருகாலத்தில் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து தற்போது சிங்கப்பூர் நிரந்தரவாசியாகிவிட்ட செளம்யாவின் 'நான் என்னைக் காதலிக்கிறேன்' என்ற கதையும் விரிவாக விமர்சிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற நூல் வெளியீட்டில் 17 பெண் எழுத்தாளர்கள் நூல்களையும், பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டார்கள். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தோடு இணைந்து, சிங்கப்பூர்-மலேசியத் தமிழ் இலக்கிய ஆய்வுக்கு உதவும் வகையில் தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கையை அமைத்ததற்காக, முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவுனர் மு.முஸ்தபா அவர்களுக்கு முதல் நூல் சமர்ப்பிக்கப்பட்டது. 'அன்பின் ஊற்று' அப்துல் ஜலீல் தலைமையில், திரைப்பட இயக்குனர் அமீர் முதல் நூலை முஸ்தபாவிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமீரின் உரை அமைந்தது.
'நான் பொதுவாக புத்தகம் வாசிப்பவனில்லை, அதிகமாக மனிதர்களைத்தான் வாசிக்கிறேன்' என்ற நேர்மையான வாக்குமூலத்தோடு துவங்கிய அமீரின் ஒப்பனையற்ற பேச்சு சிங்கப்பூர் போன்ற நகரவாழ்க்கையின் ஒப்பனைமிகுந்த சிக்கல்களை சதா நுகர்ந்து கொண்டிருக்கும் மனங்களைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்ததில் ஆச்சரியமில்லை. 'எதை எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை, தொடர்ந்து எழுதுவதுதான் முக்கியம்' என்ற சொன்ன அமீர், சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டில் 20 தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதே ஒரு தமிழனாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பெண் எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதுவது மட்டுமே கூட இந்தத் தொகுப்பின் வெற்றியாக அமையக்கூடும் என்பது தொகுப்பாசிரியரின் கருத்து. ஒரு வேலை நாளில், 250 பேருக்குமேல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது பெரிய விஷயம். இன்னும் பல நூல்களுக்கு இந்தக்கூட்டம் ஒரு உந்து சக்தியாக இருக்கக்கூடும்.













Monday, August 13, 2007

"எங்கள் சிங்கப்பூர்" பன்மொழி இசைவட்டு வெளியீட்டு விழா

தேசியதின விழாவைச் சார்ந்து, AI MEDIA PTE LTD தயாரிப்பில் சிங்கப்பூரின் சிறப்புகளைப் பேசும் "எங்கள் சிங்கப்பூர்" என்ற பன்மொழி இசைவட்டு வெளியீட்டு விழா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்த்துக்களோடு 07/08/07, செய்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்த இசைவட்டை இசையமைத்து தயாரித்துள்ளார் திரு.அறிவழகன்.

பாலு மீடியாவால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு கோமளவிலாஸ் உரிமையாளர் திரு.குணசேகரன் முன்னிலை வகிக்க, புதுமைத்தேனீ திரு.மா.அன்பழகன் தலைமையில் ஒலி 96.8-ன் முன்னாள் தலைவர் திரு.அழகிய பாண்டியன் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் சிங்கப்பூர் நிரந்தரவாசியான இசையமைப்பாளர் திரு.அறிவழகன் தனது பாடலை தமிழ் மொழி மட்டுமில்லாமல், ஆங்கில, சீன, மலாய் மொழிகளிலும் வெளியிட்டிருப்பது சிறப்பிற்குரியது என்று குறிப்பிட்டு, இன, மொழி நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் இத்தகைய முயற்சிகள் இன்னும் நிறையத்தேவை என்று கேட்டுக் கொண்டார்.

திரு.மா.அன்பழகன் தனது தலைமையுரையில் தான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக இருந்தபோது, இசையமைப்பாளர்கள் எத்தகைய சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள் என்பதை உணர்ந்திருப்பதால், சீன, மலாய், தமிழ் இசைக்கூறுகளை ஒன்றிணைத்து உருவாகி இருக்கும் இந்த இசைவட்டு முயற்சியை மிகவும் பாராட்டுவதாகச் சொன்னார்.

வெஸ்டர்ன் யூனியனின் வர்த்தக நிர்வாகி திரு.பிரேம் ஆனந்த் இசைவட்டை வெளியிட, சிங்கப்பூர்த் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் திரு.செல்வராஜ் முதல் இசைவட்டைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து குளோபல் ·போனிக்ஸ் நிறுவன நிர்வாகி திரு.சக்தி உட்பட பலரும் இசைவட்டைப் பெற்றுக் கொண்டார்கள்.

கவிஞர் பனசை நடராஜனும், திருமதி.விஜி ஜெகதீஷ¤ம் வழிநடத்திய இந்நிகழ்ச்சியில் ஏராளமான வர்த்தகர்களும், தமிழ் ஆர்வலர்களும், சிங்கப்பூர் சின்னத்திரை நட்சத்திரங்களும் கலந்து சிறப்பித்தார்கள். சிறியோர் பெரியோர் பேதமின்றி அனைவரையும் கவர்ந்த இந்த இசைவட்டின் பாடல்கள் விரைவில் ஒலி96.8ல் ஒலிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியை வழி நடத்திய கவிஞர் பனசை நடராஜன் & திருமதி.விஜி ஜெகதீஷ்
வரவேற்புரையாற்றும் திரு. பாலு மணிமாறன்

சிறப்புரையாற்றிய திரு.அழகிய பாண்டியன்


தலைமையுரையாற்றிய திரு.மா.அன்பழகன்


நன்றியுரையாற்றும் இசையமைப்பாளர் திரு.அறிவழகன்


வெஸ்டர்ன் யூனியனின் திரு.பிரேம் ஆனந்த் இசைவட்டை வெளியிட, சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் திரு.செல்வராஜ் முதல் இசை வட்டை பெற்றுக் கொள்கிறார்


முன்னிலை வகித்த கோமளவிலாஸ் உரிமையாளர் திரு. குணசேகரன் இசைவட்டைப் பெற்று வாழ்த்தும் காட்சி

2004ன் மிஸ்.வசந்தம் ஷோபனாவும் அவரது தாயாரும்

நிகழ்ச்சிக்கு வந்திருந்த கூட்டத்தில் ஒரு பகுதி

Saturday, June 23, 2007

"சிங்கப்பூர் - மலேசியத் தமிழ் இலக்கியம் - நேற்று, இன்று, நாளை"

நேற்று இன்று நாளை ---- ஜெயந்தி சங்கர்

சிங்கப்பூர் மலேசிய தமிழ் இலக்கியம் 'நேற்று இன்று நாளை' என்ற ஒரு பயனுள்ள கருத்தரங்கு சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் கடந்த சனிக்கிழமையன்று (09-06-07) மாலை ஆறுமணியளவில் நடந்தேறியது. தேசியநூலகவாரியம் மற்றும் சிங்கைத் தமிழ் சங்கம் ஆகிய அமைப்புக்களின் ஆதரவுடன் பாலுமணிமாறனின் பாலு மீடியா மேனேஜ்மெட் ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வின் நெறியாளர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ. வரவேற்புரை மற்றும் நன்றியுரைகளைச் சுருக்கமாக முடித்துக் கொண்டார் பாலுமணிமாறன்.
(திரு.செ.ப.பன்னீர் செல்வம்)

1980களில் சிங்கப்பூர் கவிஞர் பரணன் அவர்களால் இயற்றப்பட்டு மலேசிய இசைஞர் ஒருவரால் மெட்டமைக்கப்பட்ட தமிழ்மொழியைப் போற்றிடும் ஒரு பாடலைத்தானே பாடி மரபுவழியில் தனது உரையை துவங்கிய சிங்கப்பூர் வானொலியைச் சேர்ந்த சே.பா.பன்னீசெல்வம், சிங்கப்பூரின் 1990 வரையிலான தமிழ் இலக்கியத்தைக் குறித்துப் பேசினார். சிங்கப்பூர் மலேசிய தமிழ் இலக்கியத்திற்கிடையே நிலவிய நட்புறவு, சிங்கப்பூர் 'இந்தியாவின் சிட்னி' என்றழைக்கப்பட்ட விவரம், அக்காலத்தில் நடந்த எழுத்துப் பட்டறைகள், தமிழ் முரசு தவிர அன்று நடந்த சில பத்திரிக்கைகளின் செயல்பாடுகள், பல பத்திரிக்கைகளின் ஒரு பிரதிகூட கைவசம் இல்லாத நிலை, கலைமகள் தமிழ்ப்பள்ளி, மாணவர்களுக்கென்று நடத்தப்பட்ட போட்டிகள், வானொலி சார்ந்த நிகழ்வுகள், நினைவுகள், வானொலியில் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் என்று விரிந்த இவரின் உரையில் தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வுநூல்கள் மலேசியாவில் இருக்கும் அளவில் சிங்கப்பூரில் இல்லை என்ற முக்கிய ஆதங்கமாகத் தெறித்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், மொழி அடையாளம் அறியப்படாத ஒரு கல்வெட்டு சிங்கப்பூரில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டு ஆங்கிலேய அதிகாரி குண்டு வைத்துத் தகர்த்தபோது பாதி கல்வெட்டு உடைந்த நிலையில் மறுபாதி இன்றும் சிங்கப்பூரில் இருப்பதாகவும் அதில் இருப்பது பழைய தமிழ் எழுத்துக்கள் என்றும் அது குறித்த விரிவான ஆராய்ச்சியின் தேவை குறித்தும் சொன்னார். 1896ல் சிகந்தர் சாகிப் என்பவர் எழுதிய 'மலாய் காவியம்' குறித்த பதிவு சிங்கப்பூரின் தேசிய நூலகத்தில் இருக்கும் 'Pages from yester years' எனும் நூலில் இருப்பதைக் குறித்துச் சொல்லி, இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வானொலித் துறையின் பல புத்தகங்களை சிறைக்கைதிகள் 'பைடிங்க்' செய்து கொடுத்ததாகவும் சில சுவாரஸிய தகவல்களைச் சொல்லி மொழிப்பற்றையும் மண்மணம் கமழும் படைப்புக்களின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
(திரு.சை.பீர் முகம்மது)
அடுத்து பேசவந்த மலேசியமூத்த படைப்பாளி சை.பீர்முகம்மது மலேசியாவின் 1990வரையிலான இலக்கியத்தை இருபது நிமிடங்களில் சொல்லிவிடமுடியாது என்று ஆரம்பித்து, ஒரே ஒரு கிலோமீட்டர் இடைவெளி இருக்கும் சிங்கப்பூர் மலேசியாவிற்கிடையே இருந்த 'பெர்லின் சுவர்' உடைந்ததற்கு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். மலேசியாவின் நேற்றைய இலக்கியத்தைச் சொல்லும் போது சிங்கப்பூரை ஒதுக்கிவிட முடியாது என்றும், மலேசிய தமிழிலக்கிய வரலாறு எழுதப்பட வேண்டியதன் அவசியத்தைச் சொல்லி, அக்காலட்டத்தில் வெளியான பத்திரிக்கைகள் இப்பணிக்கு சிறப்பாக உதவும் என்றும் சொன்னார்.
சிறுகதை என்று பலராலும் ஒத்துக்கொள்ளப்படா விட்டாலும், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலேயே மலேயாவின் முதல் சிறுகதை மிகுதூம் சாயிப் அவர்களால் எழுதப்பட்டுவிட்டது, அதே காலகட்டத்தில் தமிழின் முதல் மொழிபெயர்ப்பு நூல் மலாய் மொழியிலிருந்து வந்தாகிவிட்டது போன்ற பல வரலாற்றுத் தகவல்களைச் சொன்னார்.
1786ல் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்த பினாங்கின் ஒரு பள்ளிவாசலில், அக்காலட்டத்திலேயே பிள்ளைகளுக்கு அரபிக், உருது தவிர தமிழும் கற்பிக்கப்பட்டதற்கான குறிப்புகள் உண்டு; ஆகவே, குறைந்தது அதற்கும் 30 வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கவேண்டும் என்றார். நேதாஜி காலத்தில் மலேசிய தமிழ் இலக்கியம் ஒரு முடக்கத்தைக் கண்டு, பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றது என்று சொன்னார். அன்றைய தமிழ் முஸ்லிகள் கடை ஊழியர்கள் மலேசியாவில் இந்தியப்பணத்திலேயே ஊதியம் கொடுக்கப்பட்டார்கள்; 1கிலோ இறைச்சியை 54 துண்டுகளாக்கி 54 பேருக்குக் கொடுக்கப்பட்டது; போதிய உணவில்லாது வாய்ந்த கடினவாழ்வை இஸ்மாயில் 'கடை சிப்பந்திகளின் கண்ணீரி'ல் எழுதியதைக் குறிப்பிட்டார்.
புதுமைப்பித்தன் குறித்து அப்போது நடைபெற்ற சர்ச்சை அச்சூழலில் இருந்த வாசிப்புப்போதாமையையே காட்டியது என்றும் ஆதாரத்துடன் சொன்னார். 1950களுக்குப் பிறகு திராவிடச் சிந்தனைகளும் அண்ணா, கலைஞர் போன்றோரின் திரைப்பட வசனமும் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய பெருத்த தாக்கத்தைத் தன் சொந்த அனுபவங்களுடன் சேர்த்து சுவைபடச் சொன்னார். சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்தபோது எழுதப்பட்ட பாடலைக்குறிப்பிட்டர்.
( டாக்டர் சீதாலட்சுமி)

விரிவாகப் பேசிட நேரமில்லை என்று துவங்கிய சிங்கப்பூரின் முனைவர் சீதாலட்சுமி என்று பாதி நேரத்தை தனது பழைய நான்கு மொழிகளின் ஒப்பீட்டாய்வின் பகுதிகளைப்படித்துக் கழித்தார். 100 பேர் எதிர்பார்த்த இடத்தில் வந்திருந்த கிட்டத்தட்ட 65 பேரும் கொடுக்கப்பட்ட தலைப்பை மீண்டும் மீண்டும் பார்ப்பதும் லேசான சலசலைப்பை ஏற்படுத்தவும் செய்தனர். சுற்றிவளைத்து 'மற்ற மூன்று மொழிகளில் நடைபெறும் பரவலான இலக்கியச் செயல்பாடுகள் தமிழில் இல்லை' என்று சொல்ல முயன்று தமிழில் 1990 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் வெளியான சிற்கதை, ஆய்வு, கவிதை, குழ்ந்தை இலக்கியம் போன்ற நூல்களின் எண்ணிக்கைகளை முன்வைத்தார்.
குமுதம் போன்ற பத்திரிக்கைகளோடு நின்று போகும் வாசிப்பு குறித்துச் சொன்னவர் விமரிசனங்களை ஏற்றிடும் மனோபாவம் வளரவேண்டும் என்று அக்கறைப்பட்டார். படைப்பிலக்கியம் இடைவெளியில்லாமல் தொடர்ந்து செயபடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தமிழில் உறவு சார்ந்த அனுபவம், மனித பலவீனங்கள், தத்துவங்கள் குடும்ப உறவுகள், நாட்டு நடப்பு, கலப்பு மணம், பெண்முன்னேற்றச் சிந்தனை, உறவின் உண்மை முகங்கள் போன்றவை எழுதப்படுகின்றன என்று சொல்லி இளைஞர்கள் எழுதுவது குறைவாகவே இருப்பது ஒரு குறை தான் என்றார்.
பேச்சுமொழியிலேயே எழுதும் சிறுகதையின் வரவு குறித்துச் சொன்னதுடன் சிங்கப்பூரில் அமைப்புக்கள் ஒன்று படவேண்டும் என்றார். இஸ்லாமியப்படைப்புகளில் பழக்கவழக்கங்கள் சிறப்பாகப்பதியப்படுவதாகச் சொன்னவர், கவிதையில் நாட்டுத் தலைவர், நாடு, இயற்கை, பொது மற்றும் காதல் ஆகியவை பிரபலமான பாடுபொருட்களாகின்றன என்றார். தமிழ் மொழிப்புலமையைப் பொருத்து 2 பிரிவுகளாக போட்டிகளை அறிவிக்கலாம் என்றும் போட்டியில் தோற்றால் உணர்ச்சிக்குழம்பாகிவிடும் சிறுபிள்ளைத்தனங்கள் களையப்படுதல் வேண்டும் என்றும் சொன்னவர் தமிழில் பொதுவாகவே வாசிப்புப்பழக்கமும் மொழியில் முனைப்பும் இல்லை என்றார். அடுத்த பேச்சாளரை அழைக்கும் முன்னர் நிகழ்வுநெறியாளர், 'ஆய்வாளர்களும் பரவலாய் வாசிக்கவேண்டும்', என்று வலியுறுத்தியதை ஆமோதிக்கும் வகையிலான சிறுசலசலப்பு பார்வையாளர் மத்தியில் எழுந்தது.
(டாக்டர் கிருஷ்ணன் மணியம்)
மலேசியாவின் இன்றைய தமிழ் இலக்கியம் குறித்து அடுத்து உரையாற்ற வந்த டாக்டர்.கிருஷ்ணன் மணியம் வெகுசன ஆக்கங்களும் காத்திரமான ஆக்கங்களும் படைக்கப்படுவதாகச் சொல்லித் துவங்கி மரபு சிறப்பாக இருப்பதாச் சொன்னார். வானம்பாடிகளின் தாக்கம் நிறைந்த புதுக்கவிதைகளில் சில நல்ல வீச்சுக்களுடன், கவிதையில் சமகாலப்பிரச்சனைகள் சிந்து வடிவிலும், குதிரைப்பந்தயலாவணி போன்றவையும் படைக்கபடுவதாகச் சொன்னார். வெகுசன ஆக்கங்களில் பெண்களை காட்சிப்பொருளாகவும் வக்கிரங்களின் சித்தரிப்பாகவும் காணமுடிவதாகச் சொன்னார். காத்திரம் நிறைந்த ஆக்கங்களில் பொதுவுடைமைச் சிந்தனைகளும், கோட்பாட்டு ரீதியிலான செய்திகளும் விளிம்பு நிலை மாந்தரைக் குறித்துப் பேசும் படைப்புகள் மார்க்ஸிய சிந்தனைதாங்கியவையாகத் தோன்றுகின்றன என்றார்.
தொலைக்காட்சியின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் மலேசிய சமூகத்தில் அர்த்தமே தெரியாது சுலோகம் சொல்லும் போக்கும், மலேசிய வாழ்க்கைக்கு சம்மந்தமேயில்லாத திரைப்படங்களை தமது சொந்த வாழ்க்கையாகப் பார்த்திடும் குணம் இருக்கிறது என்றார். வீடு இழந்து உடமிகள் இழுந்து தமிழ் சமூகத்தில் குண்டர் கலாசாரமும் வன்முறையும் அதிகமிருக்கிறது என்று அக்கறைப்பட்டார்.
தமிழர்களின் தோட்டத்து வாழ்க்கையின் பின்னணியைச் சொல்லி, சரியான வழிநடத்துதலோ முன்னோடியோ இல்லை என்று சொன்னார். சமூகத்துக்கு இவர்களின் மேல் பரிவோ அக்கறையோ இல்லை. எழுத்தாளர்கள் சட்டாம்பிள்ளைக்ள் இல்லை என்றாலும் வாழ்க்கையைச் சரிவரப் பதிவது அவர்களின் கடமையாகிறது என்றார். இப்பேச்சாளர் பல சிறுகதைகளிலிருந்து குறிப்பிட்டவரிகளை எடுத்தாண்டு மலேசிய சிறுகதைகள் எப்படி எளியமக்களின், தோட்டத்து மக்களின் கிரானி எனப்படும் முதாலாளிகள் தொழிலாளிகளைக் கசக்கிப்பிழிவது போன்ற பிரச்சனைகளைப் பேசுகின்றன என்று தன் வாதங்களை மிகச் சிறப்பாக முன்வைத்தார்.

சிறுகதை வடிவமே மலேசியதமிழில்க்கியத்தின் பலம் என்றார். 'காட்டாறு' எனும் மாஜிக்கல் ரியலிஸ ஆக்கமும் மற்றும் தமிழனுக்கே நாடேயில்லை எனும் கூற்றை மறைமுகமாகச் சொன்ன 'குயில் கூவுகிறது' எனும் பின்நவீனத்துவமும் மலேசிய இலக்கியத்தின் முக்கிய பங்களிப்புகள் என்றார். 'Fire' திரைப்படம் வெளியாகும் முன்னரே பெண்களிடையேயான ஒருபால் உறவு குறித்துப்பேசிடும் 'பெண் குதிரை' எனும் நாவலை சை. பீர்முகம்மது அவர்கள் எழுதிவிட்டதாகக் குறிப்பிட்டார். ரெ.கார்த்திகேசு போன்றோரின் பங்களிப்பால் நாவல் வளர்ச்சி மெதுவாகவே இருந்தாலும் சீராக இருப்பதாகச் சொன்னார்.
(திரு.சுப்பிரமணீயன் ரமேஷ்)

நவீன வாழ்வின் நெருக்கடியில், மனிதன் அவகாசமற்றவனாகவும், அவசரம் கொள்பவனாகவும், மேம்போக்கானவனாகவும் மாறிவரும் சூழலில், வாசிக்கும் நாட்கள் தொலைக்காட்சியின் முன் மண்டியிடும் நாட்களாகிப் போய்விட்ட இந் நாட்களில் நாளய சிங்கப்பூர் தமிழிலக்கியத்தை கணிப்பதென்பது ஒரு விதத்தில் ஜோதிடம் கணிப்பதைப் போன்றோ, தட்ப-வெப்பக் கணிப்புகளைப் போன்றதாது என்றார் அடுத்து பேச வந்த சுப்பிரமணியன் ரமேஷ்.
இவர் வடித்தெடுத்து வந்து வாசித்த கட்டுரை முழுமையானதாக இருந்ததாக பலரும் கருத்துரைத்தனர். எதிர்காலத்தை கணிப்பதில் இருவிதமான அணுகுமுறைகளைக் கைக்கொள்ளலாம் என்றார். இப்போதிருக்கும் நிகழ்காலச் சூழலினை, அனுசரித்து அதை நீட்டித்துப் பார்ப்பது, மற்றது தன் கற்பனைக்கேற்ப சாத்தியப் பாடுகளை விரித்துக் கனவு காண்பது. உண்மையான கலைஞன் உருவாக்கப் படுவதில்லை, அவன் உருவாகிறான்.
இடையறாத தேடலிலும், சுயவிசாரணையிலும், அறத்தின்பால் கொள்ளும் தீராத காதலிலும், தான் கண்டடைந்த விழுமியங்களை சமூகத்தின் முன் வைக்கும் நெஞ்சுரத்திலும் அவன் தன்னை உருவாக்கிக் கொள்கிறான்.
கலையின் அழகென்பது அலங்கார வார்த்தைகள் அல்ல என்பதும், அது தன்னகத்தே கொண்டிருக்கும் சத்தியத்தின் அழகென்பதும், தன் ஆன்மாவிற்கு ஒளியேற்றும், அதற்கு எதுவுமே விலையாக முடியாதென்பதும் அவனுக்குத் தெரியும். அத்தகைய கலைஞர்கள் சிங்கப்பூரின் படைப்பிலக்கியத்தை வருங்காலத்தில் அலங்கரிப்பார்களா? காலம் மட்டுமே அறியும் அந்த ரகசியத்தை. சூழல், அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தேவைப்படும் கண்ணோட்ட, தளமாற்றங்கள், சில தேவையான தனி மனித மாற்றங்கள், சில தேவையான சமூக மாற்றங்கள் போன்ற ஒவ்வொன்றையும் விரிவாக அலசினார் சுப்பிரமணியன் ரமேஷ்
.
நாளைய சாத்தியப்பாடுகள் குறித்தும் ஒவ்வொன்றாக விரிவாக முன் வைத்தார். 'சிங்கப்பூரில் நாளைய தமிழிலக்கியம் வளமாக இருக்குமா? மகத்தான கலைஞர்கள் தோன்றுவார்களா? நாளையின் நிஜமென்பது இப்போதைய கணத்திலிருந்து துவங்குகிறது. வளமான தமிழிலக்கியத்தின் உருவாக்கத்தில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பிருக்கிறது. அந்தப் பொறுப்பை யாரும் யாருக்குக்குள் திணிக்க இயலாது, அவரவரின் ஆத்மார்த்தமான அக்கறையால் மட்டிலுமே அது சாத்தியம். பொறுப்பை உணர்ந்த அவரவர் சுய-விசாரணையே படைப்பிலக்கியத்துக்கு பலமாகவும் உரமாகவும் அமையும். வாழ்க்கையை அர்த்தப்படுத்திடும் தேடலும் நிச்சயம் இலக்கியத்தை வளப்படுத்தும்', என்று சொல்லி முடித்தார்.
(திரு.வித்யாசாகர்)
கடைசியாக மலேசிய தமிழ் இலக்கியம் நாளை என்று பேச வந்தார் வித்யாசாகர். தமிழன் வாழ்வை, ப்ண்பாட்டை மற்றும் மொழியைத் தொலைத்த அவலத்தை நகைச்சுவைக்கென பல்வேறு விதமாகச் சொன்னார். முதல் முறையாக வந்த சிங்கப்பூரைப் போற்றி சில வார்த்தைகள் சொன்னார். சிங்கப்பூர் மலேசியா என்று இலக்கியதளத்தில் பிரிக்காமல் இதுபோலச் சேர்ந்து செயல்படும் சாத்தியத்தைக் குறித்தும் பேசினார்.
அழகியலும் வாழ்க்கையும் அறிந்திராத ஒருவரால் எழுதமுடியாது என்றும் உண்மைகளும் நிதர்சங்களுமே இலக்கியமாகும் என்றும் சொன்ன இவர் மலேசியாவில் இளையர்கள் எழுதாததால் வயதான மூத்த தலைமுறை எழுத்தாளர்களே இப்போதும் காலத்துக்கேற்றாற்போல் எழுத வேண்டியுள்ளது என்றார். இழப்புக்களும் இம்சைகளும் அடையாள இழப்புக்களும் இருக்கும் நிலையில் இளையதலைமுறைக்கு இலக்கியத்தில் ஈடுபட ஏது நேரம் என்று ஆதங்கப்பட்டார். வாசிப்பைப் பொழுதுபோக்காக எப்படிப் பார்க்கிறார்களோ என்று ஆத்திரப்பட்டுப் பேசி அது கடமையல்லவா என்று முடித்தார்.
வெகுகாலமாக எழுதும் எழுத்தாளர்களிடையே ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு அனுசரித்து ஒற்றுமைபாராட்டிடும் பெருந்தன்மையும் இல்லையாதலால், இவ்விளைஞர்களுக்கு முன்னுதாரணமும் இல்லை. தவிரவும் தொலைக்காட்சியின் தாக்கமும், கைத்தொலைபேசிக்கடிமையான போக்கும் அதிகமிருப்பதால் வாசிப்புக்கும் எழுத்துக்கும் இளையதலைமுறைக்கு நாட்டமில்லை. எழுத்தாளர்களை விட குண்டர்களே பரவாயில்லை என்ற அளவுக்கு சில எழுத்தாளர்கள் தங்களின் கதாப்பாத்திரத்தின் அளவில் கூட நற்பண்பில்லாதவர்களாக இருப்பதாய் அலுத்துக்கொண்டார்.
திருடனின் பிள்ளை கூட திருடனாகிறான்; ஆசிரியர்களின்/ எழுத்தாளர்களின் பிள்ளைகள் தமிழே படிப்பதில்லை என்று அதிரடியாகத் தாக்கி எழுத்தாளனின் பிள்ளை எழுத்தாளாகும் சாத்தியங்கள் குறைவு என்றும் சொன்னார். 'ஏதோ இதாவது எழுதட்டும்', என்று சொந்தமாக எழுதி, அச்சில் பார்த்துப்பூரிக்கும் இளையர்களைத் தான் ஊக்குவிப்பதாகச் சொன்னார். இன்னும் 10 ஆண்டுகளில் ஒரு புதிய எழுத்தாளர் சமூகம் உருவாகும் என்று நம்பிக்கையுடன் சொன்னார்.

சிங்கப்பூர் மலேசியாவின் வரலாற்றைத் தொடாமல் சிங்கப்பூர் மலேசிய தமிழிலக்கியத்தையும் அலசிடமுடியாதென்ற பொது அவதானிப்பை கருத்தரங்கு கொணர்ந்திருந்தது. 'அச்சு இதழ்கள் தேவையா?', 'எழுதுபவர்களே குறைவாக இருக்கும் போது இஸங்கள் தேவையா?', 'எழுத்தாளர்கள் சட்டாம்பிள்ளைகளா?', 'தனிமனித துதி தேவையா? இலக்கியம் நவீனத்தை நோக்கிப்போக இவ்வகைப்போக்குகள் உதவுமா?', 'படைப்பு யாரைத் திருபிதிப்படுத்தவேண்டும்? படைப்பாளியையா? வாசகனையா? விமரிசகரையா? திறனாய்வாளரை?' என்று பல்வேறு கேள்விகளுக்கு சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஆறு பேச்சாளர்களும் கேள்விகளுக்கு பதிலளித்தனர். சிங்கப்பூரின் 'வீராசாமி சாலை' குறித்து பேச்சாளர் வித்யாசாகர் கேட்டகேள்விக்கு செ.பா.பன்னீர்செல்வம் அவர்கள் நாட்டுவைத்தியர் வீராசாமி குறித்து விரிவாகச் சொல்லி சாலையின் பெயர்பின்னணியை விளக்கினார். நேரக்குறைவால் குறுகிவிட்ட கலந்துரையாடலில் பாதிக்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய சீட்டுகளை அவ்வந்த பேச்சாளர்களிடம் வெறுமே கொடுத்துவிடவேண்டிய நிலை. மிகவும் ஈடுபாட்டுடன் ஒன்றிப்போயிருந்த பார்வையாளர்களிடையே 'ஒருநாள் கருத்தரங்காக இருந்திருக்கவேண்டும்', என்ற ஒருமித்த கருத்து நிலவியது. நிகழ்ச்சி கிட்டத்தட்ட முழுவெற்றியடைந்தது.